Wednesday, April 20, 2016

பூக்கள்....

செடிகளில் பூக்கும் பூக்களை   விட பூ பூக்கும் மரங்கள்  என்னை சிறுவயதில் இருந்து மிகவும் கவர்கிறது. மரமல்லி, சரகொன்றை, மகிழம்பூ, செண்பகபூ, நாகலிகம் போன்ற மரங்கள் . அங்கொன்றும்  இங்கொன்றும் இருக்கும் இந்த மரங்களை பார்க்கும் போது சிறு வயதில் நான் பார்த்த மரங்களும், அதை கடக்கும் போது வந்த மணமும் நினைவில் வரும். இப்போது ஊரெங்கும்  கொன்றை பூக்கள் அழகாக பூத்துள்ளது. பள்ளிக்கு நகர பேருந்தில் பயணிக்கும் போது,  ஒரு பேருந்து நிறுத்தத்தில்  இருந்த சரகொன்றை மரத்தில் அதன் அழகிய மஞ்சள் பூக்களை பார்த்தவாறு பயணித்தது   இப்போதும்  மறக்கவில்லை( சில வருடங்களில்  அந்த மரம் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியில் வெட்டப்பட்டது).

ஆனால் இந்த புங்க மரம் பற்றி தெரிந்த போதும், சிகைக்காயில் சேர்க்க அதன் விதைகளை தேடி அலைந்த போதும்,  அதன் பூக்களை கவனித்தது இல்லை . சென்ற வருடம் மார்ச் மாதத்தில் ஒரு நாள், சிக்னலில் காத்துகொண்டு இருந்தபோது தான் இதன் பூக்களை முதன்முதலில் பார்த்தேன். அப்போதும் பூக்களை முதலில் கவனிக்கவில்லை, அதனை சுற்றி பறந்த தேனிகளை தான் பார்த்தேன். இவ்வளவு தேனிகள் ஏன் இங்கு என்று கவனித்தபோது தான் பூக்கள் தெரிந்தன. அடர்த்தியான நிறங்கள் இல்லை  ஆனால் அழகான நிறம், கொத்துத் கொத்தாய் அவ்வளவுப் பூக்கள். அப்போது இருந்து புங்க மரத்தை பார்க்கும்போதேல்லாம் பூக்கள் இருகிறதா என்று கவனிப்பேன். இந்த மாதங்கள் கொன்றை பூக்கள் போலவே புங்கம்பூக்கள் பூக்கும் பருவம் போல், எங்கள் வீட்டு வாசலில் உள்ள மரத்தில்லும் பூ பூத்து உள்ளது. பார்த்து ரசித்து படமெடுத்து, மகளுக்கும் காட்டினேன். தலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றாள், ஒரு சிறிய கொத்து பறித்து அவளுக்கு சூடி அழகும் பார்த்தேன் .


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...